புவனகிரி அருகேசாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதல்பதற்றம்; போலீஸ் குவிப்பு
புவனகிரி அருகே சாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதனால் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புவனகிரி,
இருபிரிவினர் மோதல்
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாத்தப்பாடி கிராமத்தில் சாலக்கரை மாரியம்மன் கோவில் உள்ளது. மாசிமகத்தையொட்டி நேற்று முன்தினம் அலங்கரிக்கப்பட்ட சாலக்கரை மாரியம்மன் தீர்த்தவாரிக்காக கிள்ளை கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தீர்த்தவாரி முடிந்ததும் மீண்டும் மேளதாளத்துடன் சாத்தப்பாடி கிராமத்திற்கு சாலக்கரை மாரியம்மன் ஊர்வலமாக புறப்பட்டார். மேலமணக்குடியில் வந்தபோது சாமியுடன் ஊர்வலமாக வந்தவர்கள் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதை மேலமணக்குடி கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் தட்டிக்கேட்டனர். இதனால் இருபிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி இருபிரிவினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.
7 பேர் கைது
இதனால் தங்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மேலமணக்குடி கிராம மக்களும், சாத்தப்பாடி கிராம மக்களும் புவனகிரி-குறிஞ்சிப்பாடி சாலையில் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இந்த மோதல் சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இருபிரிவினரிடையே ஏற்றட்ட மோதலால் 2 கிராமத்திலும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எனவே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.