வீடுகள் தோறும் குப்பைகளை தரம் பிரித்து தர இரு வண்ண குப்பை தொட்டிகள்
தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் வீடுகள் தோறும் குப்பைகளை தரம் பிரித்து தர இரு வண்ண குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் வகையில், கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதற்கு வசதியாக சிவப்பு, பச்சை வண்ணங்களில் குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு இரு வண்ண குப்பை தொட்டிகளை வழங்கினார். மேலும் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கிய குடும்பத்தலைவிகளுக்கு தக்காளியை ஊக்கப்பரிசாக ஊராட்சி மன்றத்தின் சார்பில் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கோவிந்தராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்களும் கிராம மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தேவரியம்பாக்கம் கிராம மக்கள் தரம் பிரித்து வழங்கும் குப்பைகளை முறையாக சேகரித்து மக்க வைத்து தொழு உரமாக்கி அந்த உரத்தை மண் புழு உரமாக செறிவூட்டி கிராம விவசாயிகளுக்கு வழங்கி வரும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு கிராம மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.