அறுவடைக்கு தயாரான மஞ்சள் குலைகள்
அறுவடைக்கு மஞ்சள் குலைகள் தயாராக உள்ளது.
கந்தர்வகோட்டை அருகே மருங்கூரணி மற்றும் கொல்லம்பட்டி கிராமங்களில் வீடு தோறும் தங்கள் தோட்டத்தில் உள்ள ஒரு சிறு பகுதியை ஒதுக்கி அதில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் குலையை புது பானையில் கட்டி பொங்கல் இடுவது மங்கலகரமாக இருப்பதற்காகவும், தங்களின் இல்லங்களில் சுப நிகழ்ச்சிகள் மேலும் மேலும் பெருகி வளர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவதற்காகவும் இவ்வாறு செய்கிறார்கள். மேலும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் வீடு தோறும் மஞ்சள் பயிர் சாகுபடி செய்கிறோம். இது எங்கள் குலத்தொழில் என்று அதிக அளவில் பயிர் செய்யாமல் பொங்கல் பண்டிகைக்கு எங்களுக்கு தேவையான ஒரு சிறு தொகையை இதிலிருந்து எடுத்து பொங்கல் செலவு செய்வதற்காக இந்த மஞ்சள் கொத்து பயிரிடப்பட்டு நாங்கள் விற்பனை செய்து வருகின்றோம். இந்த மஞ்சள் கொத்து விற்பனையால் எங்கள் பகுதி மக்களுக்கு ஒரு சிறு தொகை கிடைப்பதால் பொங்கல் பண்டிகையை நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம் என்று கூறினர்.