தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மகன்-மகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மகன், மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மகன், மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு பெண் தனது மகன் மற்றும் மகளுடன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில், அந்த பெண் பாலக்கோட்டை சேர்ந்த மகாலட்சுமி (வயது 41) என தெரியவந்தது. அவரது கணவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இறந்து விட்டதாகவும், கணவர் சம்பாதித்த சொத்துக்களை உறவினர்களில் சிலர் தர மறுப்பதாகவும், அந்த சொத்துக்களை மீட்டு தர வலியுறுத்தி குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மண்எண்ணெய் சிக்கியது
இதேபோல் ஏரியூர் பகுதியை சேர்ந்த முதியவர் ராஜாமணி தனது மனைவி மற்றும் பேரக்குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது தீக்குளிக்க மண்எண்ணெய் கேனை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்த சொத்து தொடர்பாக உறவினர்கள் சிலர் தகராறு செய்வதாகவும் தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி தீக்குளிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.