ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி


ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி
x

வேடசந்தூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். அவருடைய மனைவி சசிகலா (வயது 34). இவர், விட்டல்நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். சசிகலா, ஸ்கூட்டரில் விட்டல்நாயக்கன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வேடசந்தூர்- திண்டுக்கல் சாலையில் நாகம்பட்டி பிரிவு என்னுமிடத்தில் தனியார் மில் அருகே வந்தபோது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அதில் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். பின்னால் உட்கார்ந்து இருந்தவர் திடீரென்று சசிகலாவின் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே சசிகலா சுதாரித்து கொண்டு சங்கிலியை கையால் இறுக்கி பிடித்து கொண்டார். இதனால் ஸ்கூட்டரை ஓட்ட முடியாமல் நிலை தடுமாறி சசிகலா கீழே விழுந்தார். அவர் 'திருடன், திருடன்' என்று கூச்சலிட்டார்.

இதை பார்த்த அந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சசிகலாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசில் சசிகலா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story