திருச்சி ராயல்ரோடு சாலையோர பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடக்கும் அவலம்


திருச்சி ராயல்ரோடு சாலையோர பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடப்பதால் குழந்தைகள் அவதியடைந்து வருகிறார்கள்.

திருச்சி

சாலையோர பூங்காக்கள்

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகுநகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோர்ட்டு சாலை, பாலக்கரை வேர்ஹவுஸ், வயலூர்ரோடு, கண்டோன்மெண்ட் ராயல்ரோடு, ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை உள்பட பல்வேறு இடங்களில் சாலையோர பூங்காக்களுடன் கூடிய நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன.

திருச்சியில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாத நிலையில் இந்த பூங்காக்களுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து சென்றனர். மேலும் நடைபயிற்சி செய்வது, உடற்பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றுக்காகவும் பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

பராமரிப்பின்றி கிடக்கும் அவலம்

ஆனால் கொரோனா பெருந்தொற்று வந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக மாநகரில் உள்ள பூங்காக்கள் மூடப்பட்டன. இதனால் பூங்காக்கள் பராமரிப்பின்றி போடப்பட்டன. மாநகரில் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வந்த பூங்காக்கள் தற்போது மோசடையும் நிலைக்கு சென்று வருகிறது. குறிப்பாக கண்டோன்மெண்ட் ராயல்ரோடு சாலையோர பூங்காவில் சிறுவர், சிறுமிகள் விளையாடுவதற்காக வைக்கப்பட்டு இருந்த உபகரணங்கள் உடைந்து கிடக்கிறது.

அங்கு பராமரிக்கப்பட்டு வந்த செடிகளில் தண்ணீர் விடாததால் காய்ந்தும், அங்கு வைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் பயன்பாடு இன்றியும் கிடக்கிறது. மேலும், அங்கு சிறுவர்கள் பயன்படுத்துவதற்கும், பெரியவர்கள் பயன்படுத்துவதற்கும் தனித்தனியாக கழிவறை உள்ளன. இந்த கழிவறையில் தண்ணீர் இன்றி பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு அலங்கோலமாக உள்ளன.

சீரமைக்க கோரிக்கை

இதுதவிர, இந்த பூங்காவுக்கு வெளியே ஏராளமான மதுபாட்டில்களும் சிதறி கிடந்தன. இதனால் ஒருசில சமூக விரோத கும்பல் மதுஅருந்திவிட்டு பூங்காவில் படுத்து உறங்குவதாக கூறப்படுகிறது. திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு பொழுது போக்குவதற்கும், உடல் நலத்தை பேணுவதற்காகவும் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த பூங்காக்கள் தற்போது முறையான பராமரிப்பின்றி கிடக்கிறது. இதை சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story