கல்லணைக்கால்வாய் கரையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள்


கல்லணைக்கால்வாய் கரையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள்
x

கல்லணைக்கால்வாய் கரையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்று கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் கூறி உள்ளார்.

தஞ்சாவூர்

கல்லணைக்கால்வாய் கரையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்று கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் கூறி உள்ளார்.

ஆறுகள் புனரமைப்பு

தஞ்சை மாவட்டத்தில் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, புது ஆறு எனப்படும் கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகள் பிரிகிறது. இதில் கல்லணைக்கால்வாய் மூலம் தஞ்சை மாவட்டம் மட்டும் அல்லாது புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியிலும் என 2½ லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த ஆறு விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணி ரூ.2 ஆயிரத்து 639 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ளும் போது அதற்கு இடையூறாக இருந்த மரங்கள் அகற்றப்பட்டன.

மரக்கன்றுகள் நடும் பணி

இதையடுத்து அகற்றப்பட்ட மரங்களுக்கு ஈடாக ஒரு மரத்திற்கு பதிலாக 10 மரக்கன்றுகள் நடப்படுகிறது. அதன்படி தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டை கிராமத்தில் கல்லணைக்கால்வாய் கரையில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த மரக்கன்றுகள் நடும் பணியை கீழ்காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், "கல்லணைக்கால்வாய் பகுதியில் மட்டும்இதுவரை 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன"என்றார். இந்த நிகழ்ச்சியில் கல்லணைக்கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் பாண்டி, உதவி செயற்பொறியாளர் இளங்கண்ணன், உதவி பொறியாளர்கள் சுரேந்திர மோகன், விக்னேஷ், சதீஷ், ராஜமாணிக்கம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story