பல்லி விழுந்த சத்துமாவு சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 34 பேருக்கு சிகிச்சை
திண்டிவனம் அருகே பல்லி விழுந்த சத்துமாவு சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 34 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே நெய்குப்பி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் சத்துமாவு வழங்கப்படுகிறது. வழக்கம்போல் இன்று காலையிலும் குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டது.
இதை குழந்தைகளும் வாங்கி விரும்பி சாப்பிட்டனர். இந்த சத்துமாவை அந்த கிராமத்தை சேர்ந்த சில பெண்களும் வாங்கி சாப்பிட்டனர். அப்போது அந்த சத்துமாவில் பல்லி ஒன்று செத்து கிடந்தது. இதை பார்த்து பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் குழந்தைகளின் பெற்றோர் பதறியடித்துக்கொண்டு அங்கன்வாடி மையத்திற்கு ஓடிவந்தனர். பின்னர் அவர்கள், தங்களது குழந்தைகளை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதேபோல் சத்துமாவு சாப்பிட்ட பெண்களும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு பல்லி விழுந்த சத்துமாவு சாப்பிட்ட 14 குழந்தைகள், 20 பெண்களை டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
பணியாளர்களிடம் விசாரணை
பல்லி விழுந்த சத்துமாவு சாப்பிட்ட குழந்தைகள், பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், எந்த பிரச்சினையும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே சத்துமாவில் பல்லி விழுந்தது தொடர்பாக அங்கன்வாடி மைய பணியாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.