பண்ருட்டியில் கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் நகரசபை ஆணையருக்கு போக்குவரத்து போலீசார் கடிதம்


பண்ருட்டியில் கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் நகரசபை ஆணையருக்கு போக்குவரத்து போலீசார் கடிதம்
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகரசபை ஆணையருக்கு போக்குவரத்து போலீசார் கடிதம் அனுப்பி உள்ளார்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி நகரில் கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகள் பல ஆண்டுகாலமாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் நகரின் பிரதான பகுதிகளான காந்தி ரோடு மார்க்கெட், கடலூர் ரோடு, கும்பகோணம் ரோடு, சென்னை ரோடு, ராஜாஜி சாலை லிங்க் ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரர் பத்மநாபன் பண்ருட்டி நகர சபை ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பண்ருட்டி காந்தி ரோடு, சென்னை சாலை, கடலூர் ரோடு, கும்பகோணம் ரோடு மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியேறும் பகுதி, லிங்க் ரோடு ஆகிய இடங்கள் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளாக இருந்து வருகிறது. இந்த இடங்களில் முக்கிய வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், காய்கறி கடைகள் ஆகியவை உள்ளன. இந்த பகுதியில் உள்ள கடைகளின் முன்புறம் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு தரைக்கடைகளும் அதிகம் காணப்படுகிறது. அவ்வப்போது போக்குவரத்து காவலர்களை கொண்டு நெரிசலை சரி செய்து வருகிறோம். என்றாலும் அது முற்றுப் பெறவில்லை. ஆகையால் தாங்கள் உடனடியாக கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தக்க நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம். இதற்கு காவல்துறை முழு ஒத்துழைப்பை அளிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் நகல்கள் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் தாசில்தார் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Next Story