நெல்லையில் போக்குவரத்து நெருக்கடி


நெல்லையில் போக்குவரத்து நெருக்கடி
x

நெல்லையில் சாலை சீரமைப்பு பணி நடைபெறுவதால் சுவாமி நெல்லையப்பர் ஹைரோட்டில் கடும் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருநெல்வேலி

நெல்லையில் சாலை சீரமைப்பு பணி நடைபெறுவதால் சுவாமி நெல்லையப்பர் ஹைரோட்டில் கடும் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர்திட்டம், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. இதனால் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நெல்லை டவுன் ஆர்ச்சில் தொடங்கி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் வரையிலும் சாலை விரிவாக்க பணிகள், கழிவு நீரோடை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

பொருட்காட்சி திடல் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்லும் பஸ்கள் சந்திப்புடன் நிறுத்தப்பட்டு விடுகின்றன. அதே நேரம் சந்திப்பில் இருந்து டவுனுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஸ்ரீபுரம் வழியாக செல்கின்றன.

மாற்றுப்பாதை

செங்கோட்டை, தென்காசி, பேட்டை, கடையம், முக்கூடல் வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் தச்சநல்லூர், கண்டியபேரி வழியாகவும், டவுனில் இருந்து சந்திப்பு வரும் கார், மோட்டார் சைக்கிள்கள், லாரிகள் உள்ளிட்டவை நயினார்குளம் ரோடு, தச்சநல்லூர் வழியாகவும் வருகின்றன.

இதனால் டவுன் பகுதியில் உள்ள பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் தென்காசி செல்ல வேண்டுமானால் பழையபேட்டை கண்டியபேரி வரை நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோர் வண்ணார்பேட்டை பகுதிக்கு வந்து அங்கிருந்து தென்காசி வழித்தட பஸ்களில் ஏறி சென்றனர்.

பாதிப்பு

இதேபோல் நெல்லை சந்திப்பு, டவுன் பகுதிகளில் இருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த போக்குவரத்து மாற்றத்தால் மாநகரப்பகுதி முழுவதிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது. குறிப்பாக நெல்லை சுவாமி நெல்லையப்பர் ஹைரோடு, தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில், டவுன் தொண்டர் சன்னதி, வழுக்கோடை உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்கின்றன.

இதனால் அந்த பகுதிகளில் கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமித்து வாகன நெருக்கடியை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் குழாய் பதிக்க குழி

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே உள்ள தச்சநல்லூர் மண்டல அலுவலகம் செல்லுகின்ற சாலை அருகே மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் அந்த இடத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லுகின்ற வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் செல்கின்றன.

இதனால் நெல்லை சந்திப்பு பகுதியில் நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.


Next Story