திட்டக்குடி சந்திப்பில் போக்குவரத்தை சரி செய்ய கோரிக்கை
திட்டக்குடி சந்திப்பில் போக்குவரத்தை சரிசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது.
ராமேசுவரம்,
திட்டக்குடி சந்திப்பில் போக்குவரத்தை சரிசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது.
திட்டக்குடி சந்திப்பு
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டு மல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் கார், வேன், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு ராமேசுவரத்திற்கு பக்தர்கள் வரும் அனைத்து வாகனங்களும் பஸ் நிலையத்தில் இருந்து திட்டக்குடி சந்திப்பு சாலை வழியாகவே ஜே.ஜே.நகரில் உள்ள வாகன நிறுத்து மிடம் மற்றும் அக்னிதீர்த்த கடற்கரை பகுதிகளில் நிறுத்தி விட்டு மீண்டும் இதே வழியாக திரும்பி வருகின்றன.
அரிச்சல்முனை
கோவிலுக்கு உள்ளே செல்வதும் மீண்டும் திரும்பி வருவதும் அதே சாலையாக இருப்பதால் குறிப்பாக திட்டக்குடி சந்திப்பு சாலையில் தொடர்ந்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அதுபோல் ராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி, ராமர் பாதம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்றால் அனைத்து வாகனங்களும் திட்டக்குடி சந்திப்பு பகுதிக்கு வந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
அதிலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த பின்பு ராமேசுவரம் வரக்கூடிய சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள போதிலும் ராமேசுவரம் வரக்கூடிய சுற்றுலா வாகனங்கள் ஒரே சாலை வழியாக வந்து மீண்டும் அதே சாலை வழியாகவே திரும்பிச்செல்லும் நிலை தான் தற்போது வரையிலும் இருந்து வருகிறது.
நெருக்கடி
இதனால் திட்டக்குடி சந்திப்பு சாலையை பொருத்தவரை எந்தநேரமும் கடும் போக்குவரத்து நெருக்கடி யாகவே இருந்து வருகின்றது. ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் இருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் ஒன்று திட்டக்குடி சந்திப்பு சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெருக்கடியால் விரைந்து செல்ல முடியாமல் ஊர்ந்தபடி சென்றது.
எனவே ராமேசுவரத்திற்கு சுற்றுலா வாகனங்கள் திட்டக்குடி சாலை வழியாக வந்து மாற்று பாதை வழியாக செல்லும் வகையில் உடனடியாக புதிய திட்டம் ஒன்றை அமைத்து சாலையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகள் மற்றும் ராமேசுவரத்தை சேர்ந்த பொது மக்களின் விருப்பம் மற்றும் கோரிக்கையாகும்.