பாரம்பரிய ரக நெல் சாகுபடி பணி
நெடும்பலம் அரசு விதைப்பண்ணையில் பாரம்பரிய ரக நெல் சாகுபடி பணி நடந்தது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் நெடும்பலம், கீராந்தி, தீவாம்பாள்பட்டினம் ஆகிய பகுதிகளில் அரசு விதை பண்ணைகள் உள்ளன.இந்த பண்ணைகளில் தலா 15 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து, அதன் மூலம் விதை உற்பத்தி செய்து, இந்த விதை நெல்லை விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்க தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை திட்டமிட்டுள்ளது.இதன் முதல் கட்டமாக நெடும்பலம் அரசு விதை பண்ணையில் 5 ஏக்கரில் மாப்பிள்ளை சம்பா எந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக தூய மல்லி பாரம்பரிய நெல் ரகத்தினை 10 ஏக்கரில் எந்திர முறையில் நடவு செய்ய தேவையான நாற்றுகளை பாய் நாற்றங்கால் முறையில் உற்பத்தி செய்யும் பணி நேற்று நடந்தது. இந்த பணியை மாவட்ட வேளாண்மை இயக்குனர் (பொறுப்பு) ரவீந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாய்நாற்றங்காலில் பயன்படுத்தப்படும் விதை நெல்லில் சூடோமோனஸ் மற்றும் உயிர் உரங்கள் கலந்து விதை நேர்த்தி செய்யும் செயல் விளக்கத்தினை பண்ணை வேளாண்மை அலுவலர் செந்தில் மற்றும் திருத்துறைப்பூண்டி துணை வேளாண்மை அலுவலர் ரவி ஆகியோர் செய்து காண்பித்தனர்.இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஏழுமலை, மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (பொறுப்பு) ஹேமா ஹெப்சிபா நிர்மலா, திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்