பாரம்பரிய உணவு திருவிழா
திருவாரூர் அருகே பாரம்பரிய உணவு திருவிழாவை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
கொரடாச்சேரி:
திருவாரூர் அருகே பாரம்பரிய உணவு திருவிழாவை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
பாரம்பரிய உணவு திருவிழா
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பனில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை, இயற்கை உணவு உற்பத்தியாளர் கூட்டமைப்பு மற்றும் பாரத் கல்லூரி இணைந்து நடத்திய பாரம்பரிய உணவுத் திருவிழா தொடங்கியது.
இந்த பாரம்பரிய உணவு திருவிழாவில் 300 வகையான பாரம்பரிய உணவுப் பொருட்கள் இடம் பெற்றிருந்தன.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
முன்னதாக அரசு பள்ளி மாணவர்கள் பறை இசையுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. உணவு திருவிழாவினை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலச்சந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
300 வகையான உணவு பொருட்கள்
மாணவர்கள் உற்சாகமாக பறை இசைத்ததை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். தொடர்ந்து 300 வகையான பாரம்பரிய உணவு பொருட்கள் மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
குறிப்பாக பாரம்பரிய அரிசி வகையில் செய்யப்பட்ட உணவு வகைகள், சிறு தானியங்களில் செய்யப்பட்ட தோசை மற்றும் இட்லி வகைகள், தூதுவளை உள்ளிட்ட பல்வேறு மூலிகையில் செய்யப்பட்ட துவையல்கள் என பல்வேறு உணவு வகைகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
கருத்தரங்கம்
மேலும் தர்பூசணியில் செய்யப்பட்ட முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி மற்றும் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உருவப்படங்களும் இடம் பெற்றிருந்தன. இதனை அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள்,பெற்றோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கண்டு களித்தனர்.
2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உணவு பாரம்பரியம் குறித்த கருத்தரங்கு மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.