புதிய கடைகள் கட்டுவது தொடர்பாக வியாபாரிகள் கருத்து கேட்பு கூட்டம்
திசையன்விளை வாரச்சந்தையில் ரூ.5 கோடியில் புதிதாக கடைகள் கட்டுவது தொடர்பாக வியாபாரிகள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.
திசையன்விளை:
திசையன்விளை வாரச்சந்தையில் ரூ.5 கோடியில் புதிதாக கடைகள் கட்டுவது தொடர்பாக வியாபாரிகள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.
வாரச்சந்தை
திசையன்விளை சந்தை வெள்ளிக்கிழமைதோறும் வாரச்சந்தையாகவும், மற்ற நாட்களில் தினசரி மார்க்கெட்டாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு இயங்கிவரும் 184 கடைகளுக்கு பேரூராட்சியில் இருந்து தினசரி வாடகை வசூலிக்கப்படுகிறது. தற்போது அந்த இடத்தில் ரூ.5 கோடி செலவில் புதிதாக கடைகள் கட்டப்பட உள்ளது. இதுதொடர்பாக வியாபாரிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது.
அப்பாவு
கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், வியாபாரிகள் சங்க பேரமைப்பு மாநில துணை தலைவர் தங்கையா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வியாபாரிகள் சங்க பேரமைப்பு திசையன்விளை தலைவர் சாந்தகுமார் வரவேற்று பேசினார்.
வியாபாரிகள் தங்களது கருத்துகளை எடுத்துக் கூறினார்கள். தொடர்ந்து வியாபாரிகள் சார்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்டு அவர் கூறியதாவது:-
ஒத்துழைப்பு
திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான சந்தையில் ரூ.5 கோடி செலவில் கடைகள் கட்டப்பட உள்ளது. பேரூராட்சிக்கு தினசரி வாடகை செலுத்தி வரும் அனைத்து வியாபாரிகளுக்கும் கடை வழங்கப்படும். புதிய கடைகள் கட்டிமுடிக்கும்வரை புறவழிச்சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதில் அனைத்து வியாபாரிகளுக்கும் தற்காலிக கடைகள் கட்டி தரப்படும். இதற்கு அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் சாஜன் மேத்யூ, கவுன்சிலர் அலெக்ஸ், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.