கார் மோதி வியாபாரி சாவு
கார் மோதி வியாபாரி இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை சேர்ந்தவர் சடையன் (வயது 73). இவரது மகன் முத்து விஜயன் (45). பூண்டு வியாபாரிகளான இவர்கள் சரக்கு வேனில் வைத்து ஒவ்வொரு ஏரியாவாக சென்று பூண்டு வியாபாரம் செய்து வருவது வழக்கம். அதேபோல நேற்று முன்தினம் விராலிமலை ஒன்றியத்தில் பல்வேறு ஊர்களில் வியாபாரம் செய்துவிட்டு மாலை மாத்தூரில் வியாபாரம் செய்தனர். பின்னர் இரவு மாத்தூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சரக்கு வேனை நிறுத்திவிட்டு தந்தை-மகன் இருவரும் உணவு சாப்பிட்டனர். பின்னர் இரவு 9.30 மணியளவில் சடையன் இயற்கை உபாதை கழிப்பதற்காக திருச்சி-புதுக்கோட்டை சாலையின் மறுபுறம் சென்றார்.
பின்னர் அவர் மீண்டும் பெட்ரோல் விற்பனை நிலையம் வருவதற்காக சாலையை கடக்க முயன்றபோது திருப்பத்தூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு செல்வதற்காக சென்ற தனுஷ்கோடி (40) என்பவர் ஓட்டிச்சென்ற கார் எதிர்பாராதவிதமாக சடையன் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.