ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் ஏலகிரிமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திருப்பத்தூர்

தொடர் விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். 14 கொண்டை ஊசி வளைவு சாலைகளில் ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க பார்வை மையம் அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் குடும்பத்தினருடன் அமர்ந்து இயற்கையின் அழகை ரசித்து போட்டோ மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர்.

இங்குள்ள இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, படகுத்துறை, முருகன் கோவில், நிலாவூர் கதவ நாச்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள்

இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் ஏலகிரி மலை சுற்றுலா தலத்திற்கு வந்தனர். அவர்கள் இங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்ததுடன், புங்கனூர் ஏரி படகுத்துறையில் படகு சவாரி செய்தும், செல்பி எடுத்தும் உற்சாகம் அடைந்தனர்.

மேலும் இங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பழ வகைகள், இனிப்பு வகைகள், சாக்லேட்டுகள் போன்றவைகளை சுற்றுலா பயணிகள் வாங்கி உண்டு மகிழ்ந்தனர். குடும்பத்தினருடன் சாகச போட்டிகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களையும் கண்டு ரசித்தனர்.


Next Story