காரங்காடு சூழல் மையத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி


காரங்காடு சூழல் மையத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி
x

தொண்டி அருகே காரங்காடு சூழல் மையத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி அருகே காரங்காடு சூழல் மையத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

காரங்காடு சூழல் மையம்

தொண்டி அருகே உள்ள காரங்காடு கடற்கரை கிராமத்தில் கடல் நீரும் ஆற்று நீரும் ஒன்று சேரும் களி முகத்துவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மாங்குரோவ் காடு அமைந்துள்ளது. இந்த மாங்குரோவ் காடுகளின் அழகை சுற்றிப் பார்க்கவும், பறவைகளின் அழகை ரசிக்கவும் இங்கு வனத்துறை மூலம் கிராம மக்களோடு இணைந்து சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த சூழல் சுற்றுலா மையத்தின் மூலம் பொதுமக்கள் கடலுக்குள் சென்று சுற்றிப் பார்ப்பதற்காக படகு சவாரி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாட்டுப்பொங்கல் தினத்தையொட்டி படகு சவாரி செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.

வனத்துறை மூலம் 3 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டதால் ஒரு படகுக்கு 20 பேர் வீதம் மட்டும் அழைத்துச் செல்லப்பட்டனர். பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிக நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பலமணி நேரம் காத்திருப்பு

இதுகுறித்து இங்கு வந்த சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

சூழல் சுற்றுலா மையம் மூலம் 3 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டதால் பல மணி நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தோம். கூடுதல் படகுகளை இயக்க வேண்டும். படகு துறையில் காத்திருப்பவர்களுக்கு போதிய நிழற்குடை வசதிகள், கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி இல்லை, இங்கு இனப்பெருக்கம் செய்ய வரும் வெளிநாட்டு பறவைகளை காண்பதற்காகவும் மாங்குரோவ் காடுகளை உயரமான இடத்தில் நின்று ரசிப்பதற்கும் உயர் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்கு செல்வதற்கு கடல் பகுதியில் இருந்து பாலம் கட்டப்படாததால் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவதில்லை. இங்குள்ள உயர் கோபுரம் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. சுமார் 45 நிமிடங்கள் மட்டும் சுற்றி காண்பிக்கின்றனர். கடலுக்குள் உள்ள சிறிய மணல் திட்டு ஒன்று உள்ளது. இந்த மணல் திட்டை வனத்துறை சூழல் சுற்றுலா மையம் நல்ல முறையில் பராமரித்து சுற்றுலா பயணிகள் அமர்ந்து உணவு அருந்துவதற்கு சிறிது நேரம் பொழுது போக்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story