ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் கோடை சீசன் களைகட்ட தொடங்கியது. மேலும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊட்டி
ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் கோடை சீசன் களைகட்ட தொடங்கியது. மேலும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குளுகுளு காலநிலை
சமவெளி பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியசை தாண்டிவிட்டது. இதனால் குளு குளு காலநிலை நிலவும் மலைப்பிரதேசமான நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
வார விடுமுறை நாளான நேற்று முன்தினமும், நேற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். இங்கு அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நுழைவுவாயிலில் டிக்கெட் பெற கூட்டம் அலைமோதியது.
படகு சவாரி
கண்ணாடி மாளிகையில் பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதில் பூத்துக்குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேல்பகுதியில் உள்ள பல வகையான கள்ளி செடிகளையும் பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் புல்வெளியில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். இதேபோல் ரோஜா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கிய ரோஜா மலர்களை கண்டு ரசித்தனர்.
படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி பொழுதை கழித்தனர். குதிரை சவாரி செய்தும் உற்சாகமடைந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
இது தவிர பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. மேலும் குன்னூர் உள்பட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது.
சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் தங்களது சொந்த வாகனங்களில் ஊட்டிக்கு வந்ததால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஊட்டி கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை, கலெக்டர் அலுவலக சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரத்தில் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வரும் வாகனங்களை லவ்டேல் சந்திப்பில் காந்திநகர் வழியாக திருப்பி விடுகின்றனர்.