ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்தனர்.

நீலகிரி

ஊட்டி,

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்தனர்.

தொடர் விடுமுறை

நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பிரதேசமாக உள்ளதால் குளு, குளு காலநிலையை அனுபவிக்க ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டையொட்டி தமிழகத்தில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையில் பொழுதுபோக்குவதற்காக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். தொடர் விடுமுறையால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது.

நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அங்கு கண்ணாடி மாளிகையில் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர். அலங்கார செடிகள், செல்பி ஸ்பாட்டில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெரிய புல்வெளி மைதானத்தில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வெடுத்தனர். இத்தாலியன் பூங்கா மேல் பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகையில் உள்ள பல வகையான கள்ளி செடிகளை பார்வையிட்டனர்.

படகு சவாரி

ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். காட்சி மாடத்தில் நின்று ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். பின்னர் படகு இல்ல சாலையில் குதிரை சவாரி சென்று உற்சாகம் அடைந்தனர். இதேபோல் தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அங்கிருந்து தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம், கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, அடர்ந்த வனப்பகுதிகள், மாநில எல்லைகளை கண்டு ரசித்தனர்.

ஊட்டி தேயிலை பூங்கா, ரோஜா பூங்கா, பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஊட்டி நகரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவை 25 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்.



Next Story