கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

விடுமுறை தினத்தையொட்டி நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திற்பரப்பு அருவியில் உற்சாக குளியலிட்டு மிகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி

விடுமுறை தினத்தையொட்டி நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திற்பரப்பு அருவியில் உற்சாக குளியலிட்டு மிகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் வழக்கத்தை விட அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். பலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

நீண்ட வரிசையில்...

அதைதொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படகில் சென்று பார்த்து ரசித்து விட்டு திரும்பினர்.

இதேபோல்,கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப்பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திற்பரப்பு

திற்பரப்பு அருவியில் தற்போது தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. திற்பரப்பிற்கும் நேற்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அதைதொடர்ந்து அருவியின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் படகுசவாரி செய்து கோதையாற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

இதேபோல், மாத்தூர் தொட்டிபாலம், பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.


Next Story