தடையை மீறி செல்லும் சுற்றுலா வாகனங்கள்
கல்லட்டி மலைப்பாதையில் தடையை மீறி செல்லும் சுற்றுலா வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. செங்குத்தாக உள்ளதால், முதல் கியர், 2-வது கியரில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறி இயக்குவதால் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் நடந்து வருகின்றன. விபத்து ஏற்படுவதை தடுக்க கல்லட்டி மலைப்பாதையில் பிற மாவட்ட மற்றும் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் வாகனங்கள் செல்ல அனுமதி இருக்கிறது. வார விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. அந்த சமயங்களில் சுற்றுலா வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. தடையை மீறி பிற மாவட்ட மற்றும் வெளிமாநில வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அனுமதி இல்லாமல் வாகனங்கள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.