தரங்கம்பாடி கடற்கரை மீண்டும் புதுப்பொலிவு பெறுமா?


தரங்கம்பாடி கடற்கரை மீண்டும் புதுப்பொலிவு பெறுமா?
x
தினத்தந்தி 30 Oct 2022 12:30 AM IST (Updated: 30 Oct 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

பழங்காலத்தில் வணிக துறைமுகமாக விளங்கிய தரங்கம்பாடி கடற்கரை பகுதி மீண்டும் புதுப்பொலிவு பெறுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

மயிலாடுதுறை

பழங்காலத்தில் வணிக துறைமுகமாக விளங்கிய தரங்கம்பாடி கடற்கரை பகுதி மீண்டும் புதுப்பொலிவு பெறுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

வரலாற்று நகரம் தரங்கம்பாடி

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் காவிரி ஆறு கரை புரண்டோடும் அழகிய டெல்டா மாவட்டங்களாகும். டெல்டா முழுவதுமே சுற்றுலா தலமாக திகழ்ந்தாலும், குறிப்பிட்ட சில பகுதிகள் வரலாற்றில் இடம் பிடித்த சிறப்புகளை கொண்டவை.

அந்த வகையில் காவிரி ஆறு, வங்காள விரிகுடாவில் கலக்கும் கழிமுக பகுதியில் அமைந்துள்ள தரங்கம்பாடி, வரலாற்று சிறப்பு மிக்க நகராகும். தற்போது மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியாக உள்ள தரங்கம்பாடியில் ஐரோப்பிய காலனி அரசுகளால் கி.பி.17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவுடன் வணிகம் செய்ய கடல்சார் வர்த்தக நிறுவனங்கள் நிறுவப்பட்டன.

தஞ்சை மன்னருடன் ஒப்பந்தம்

டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1616-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அந்த நாட்டை சேர்ந்த அட்மிரல் ஓவ்கிட் என்பவர், ஒருங்கிணைந்த தஞ்சை (இன்றைய தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின்) அன்றைய ஆட்சியாளரான ரகுநாத நாயக்க மன்னருடன் 1620-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டார்.

அதன்படி ஆண்டு வாடகை ரூ.3,111 என நிர்ணயிக்கப்பட்டு தரங்கம்பாடியின் அண்டை கிராமங்களில் இருந்து வரி வசூலிப்பதற்கு டேனிஷ் நாட்டினர் அனுமதி வாங்கினர். அப்போது தரங்கம்பாடி கடலோரம் கம்பீரமான கோட்டையும் எழுப்பப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் ஒரு தங்க இலையில் போடப்பட்டது. இந்த கையெழுத்துப்பிரதி கோபன்ஹேகனில் உள்ள டேனிஷ் அரசு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

முதன்மை துறைமுகம்

முதலில் இப்பகுதி ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது. கோட்டை கட்டியபிறகு தரங்கம்பாடியில் இருந்து பருத்தி, ஜவுளி போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் முதன்மை வணிக துறைமுகமாக மாறியது. 1845-ம் ஆண்டு தரங்கம்பாடியும், கோட்டையும் பிரிட்டனுக்கு விற்கப்பட்டது.

1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மத்திய அரசின் பொறுப்பில் இக்கோட்டை இருந்தது. 1978-ம் ஆண்டு முதல் டேனிஷ் கோட்டை தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அப்போது முதல் பொதுமக்கள் கோட்டையை சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

கோட்டையின் மேல் தளத்தில் அருங்காட்சியகமும், தரைத்தளத்தில் அழகிய பூங்காவும் உள்ளது. பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட போர் வீரர்கள் தங்கும் அறை, உணவு தானியக்கிடங்கு, வெடி மருந்து கிடங்கு, குடிநீர் சேமிக்கும் அறை ஆகியவையும் கோட்டையில் உள்ளன. இவை சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன.

பழங்கால கோட்டையை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், டென்மார்க், ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தரங்கம்பாடிக்கு வந்து செல்கின்றனர்.

புதுப்பிப்பு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி மூலம் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.4 கோடியே 83 லட்சம் செலவில் டேனிஷ் கோட்டை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. தரங்கம்பாடி பேரூராட்சி மூலம் ரூ.15 லட்சம் செலவில் கழிவறை மற்றும் குளியல் அறை கட்டப்பட்டது. ரூ.7 லட்சம் செலவில் கடற்கரையில் மர இருக்கைகள், 34 குப்பைத்தொட்டிகள், 44 பாரம்பரிய முறையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த வசதிகள் சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ள வகையில் இருந்தன. தற்போது சமூக விரோதிகளால் மின் விளக்குகள், குப்பைத்தொட்டிகள், மர இருக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதனால் தரங்கம்பாடி சுற்றுலா தலம் பொலிவிழந்து காணப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

இவற்றை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் வேதனையாக உள்ளது. தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி, சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் மின் விளக்கு மற்றும் இருக்கை வசதிகளை மேம்படுத்தி மீண்டும் கடற்கரையை புதுப்பொலிவு பெறச்செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தரங்கம்பாடியில் தமிழ் கற்ற 'சீகன்பால்கு'

தரங்கம்பாடிக்கு வந்தவர்களில் முக்கியமானவர் சீகன்பால்கு. 1706-ம் ஆண்டு ஜூலை மாதம் தரங்கம்பாடியை வந்தடைந்த இவர், ஜெர்மானியர் ஆவார். இவர் தன்னை சுற்றியிருந்த தொழிலாளர்கள் மூலம் போர்த்துக்கீசையும், தமிழையும் கற்றார். ஒரு முதிய புலவரிடம் தமிழ் படித்தார். தனது மொழிபெயர்ப்பாளரான அலப்பூ என்பவர் மூலம் 5 ஆயிரம் தமிழ் வார்த்தைகளை மனப்பாடம் செய்ததாகவும், கடற்கரை மணலில் விரலால் எழுதி தமிழ் எழுத்துக்களை பழகி கொண்டதாகவும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

டேனிஷ் பாணியில் அமைந்த 2-வது பெரிய கோட்டை

"டேனிஷ் பாணியில் அமைந்த கோட்டைகளில் 2-வது பெரிய கோட்டை தரங்கம்பாடி கோட்டை ஆகும். முதல் கோட்டை 'க்ரோன்போர்க்' கோட்டையாகும். தரங்கம்பாடியில் உள்ளூர் தொழிலாளர்கள் உதவியுடன் டேனிஷ் பாணியில் கோட்டை எழுப்பப்பட்டது"


Next Story