தக்காளி விலை கடும் வீழ்ச்சி
ஊத்தங்கரை சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தக்காளி சாகுபடி
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இருந்து விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்து ஊத்தங்கரையில் முனியப்பன் கோவில் அருகில் உள்ள காய்கறி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். மேலும் ஆந்திராவில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த சந்தைக்கு தினமும் சராசரியாக 1,000 பெட்டி தக்காளியை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
இந்த தக்காளியை வியாபாரிகள் வாங்கி சேலம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்களில் அனுப்பி வருகின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. ஊத்தங்கரை சந்தைக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பெட்டி தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
விவசாயிகள் கவலை
கடந்த வாரம் 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.500 விற்கப்பட்டது. தற்போது சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி நேற்று ரகத்திற்கு ஏற்ப ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையானது. சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.