சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும்
இனாம்காரியந்தலில் உள்ள சுங்கச்சாவடியில் உபயோகிப்பாளர் கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இனாம்காரியந்தலில் உள்ள சுங்கச்சாவடியில் உபயோகிப்பாளர் கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கலெக்டரிடம் மனு
திருவண்ணாமலை அருகே இனாம்காரியந்தல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் உபயோகிப்பாளர் கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்யக்கோரி சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வியாபாரிகள் சங்கம், பஸ் உரிமையாளர்கள் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியோர் தனி, தனியாக மாவட்ட கலெக்டர் முருகேசிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை மங்களூரு- விழுப்புரம் சாலையில் 121.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.238 கோடி மதிப்பில் இருவழித்தட சாலையாக மாநில தேசிய நெடுஞ்சாலை அலகின் மூலம் மேம்பாடு செய்யப்பட்டு உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிப்பதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சாலையில் திருவண்ணாமலை அருகில் உள்ள இனாம்காரியந்தல் என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனாம்காரியந்தல் திருவண்ணாமலை நகராட்சி எல்லையில் இருந்து 4.4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஏற்கனவே மாநில அரசு மூலம் இரு வழிச்சாலையாக மேம்பாடு செய்யப்பட்டு இருந்த இச்சாலையினை தற்போது மீண்டும் மேம்படுத்தப்பட்டது. ஆனால் இதில் வடிவியல் மேம்பாடு தொடர்பான பணிகள், புறவழிச்சாலைகளை முதலிய பிறவசதிகள் ஏதுமில்லை.
ரத்து செய்ய வேண்டும்
இச்சாலையில் சாலை பாதுகாப்பினை உள்ளடக்கிய மைய தடுப்புடன் கூடிய நான்கு வழிச்சாலைக்குரிய கூடுதல் வசதிகள் ஏதுமில்லாமல் உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிப்பது பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சாலையில் பயணிக்கும் லாரி, பஸ் உபயோகிப்பாளர்கள் கட்டணம் வசூல் செலுத்துவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதன் மூலம் சட்டம்- ஒழுங்குகெட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பாக இந்த சுங்கச்சாவடியில் உபயோகிப்பாளர் கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இதில் கூறப்பட்டு உள்ளது.
அப்போது தி.மு.க. மருத்துவரணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தாமோதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், வழக்கறிஞர்கள் கே.வி.மனோகரன், நா.பழனி, கோ.புகழேந்தி, அ.அருள்குமரன், முரளி, பிரியா விஜயரங்கன், ஏ.ஏ.ஆறுமுகம்,
மாவட்ட வணிகர்கள் சங்கத் தலைவர் மண்ணுலிங்கம், தாலுகா வியாபாரிகள் சங்கத் தலைவர் டி.எம்.சண்முகம், மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.