ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் டோக்கன் வசதி
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் டோக்கன் வசதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் விற்பனை குழுவின் கீழ் இயங்கும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மணிலா எள், உளுந்து, தேங்காய் பருப்பு உள்ளிட்ட விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் கொரோனா தடுப்பு விதி முறைகளை பின்பற்றி கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், விளைபொருளை பாதுகாப்பாக விற்பனை செய்வதற்கு ஏதுவாகவும் முன்பதிவு செய்து டோக்கன் வழங்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே விற்பனைக்கு விளைபொருட்களை கொண்டு வரும் முன்பு விவசாயிகள் தினசரி அலுவலக நாட்களில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை விற்பனைக்கூடத்தில் ஆதார் அட்டையை காண்பித்து முன்பதிவு செய்து டோக்கன் பெற்று, அதில் குறிப்பிடப்படும் நாட்களில் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும் விவசாயிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் விவரங்களுக்கு விற்பனை கூடத்தை 9655180343, 9842852150 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.