சிவகாசி மாநகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம்
சிவகாசி மாநகராட்சிக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்று நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா தெரிவித்தார்.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்று நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா தெரிவித்தார்.
திடீர்ஆய்வு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா நேற்று சிவகாசி வந்தார். மாநகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் அறையில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்தார்.
அப்போது சிவகாசி மாநகராட்சியில் செய்யப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதாள சாக்கடை
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்டம் முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். விரைவில் அனைத்து நகராட்சிகளிலும் வளர்ச்சி திட்ட பணிகள் செய்ய தேவையான நிதி ஒதுக்கப்படும்.
சிவகாசி மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த மாநகராட்சிக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை கொண்டு கூட புதிய அலுவலக கட்டிடத்தை கட்டி முடிக்கலாம். ஆனால் இன்னும் மாநகராட்சி அலுவலகத்துக்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை. இந்த பணிகள் முடிந்தவுடன் கட்டிடப்பணி தொடங்கப்படும். அதே போல் பாதாள சாக்கடை திட்டமும் கொண்டுவரப்பட உள்ளது. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சிவகாசி பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தையும், சாத்தூர் ரோட்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தையும் பார்வையிட்டார்.