ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அம்பை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
அம்பை:
கடையம் அருகே உள்ள மேட்டூர் தெற்கு தெருவை சேர்ந்த தேவ சகாயம் மகன் ஆசீர் ரத்தினராஜ். இவருடைய சகோதரர் பவுல் திருத்துவராஜ். இவர்களிடம் கடந்த 2015-ம் ஆண்டு ெரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக சென்னை அய்யம்பாக்கத்தைச் சேர்ந்த ராமநாதன், மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சிவராமன் ஆகியோர் ரூ.13.25 லட்சம் பெற்றுக் கொண்டு பல்வேறு காரணங்களைச் சொல்லி பணம் கொடுக்காமலும், வேலை வாங்கி கொடுக்காமலும் ஏமாற்றி உள்ளனர்.
இதுகுறித்து ஆசீர் ரத்தினராஜ் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் தொடர்புடைய ராமநாதன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், மாணிக்கவாசகம் ஏற்கனவே இறந்து விட்டதாலும் சிவராமன் இவ்வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து கடந்த 22-6-23 அன்று ஆழ்வார்குறிச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த அம்பை குற்றவியல் நடுவர் பல்கலைச்செல்வன், சிவராமனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.