திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x

திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழி மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் கோவிலில் 57-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 15-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் சாமி காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை, கருடசேவை, அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரமை, யானை வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

பிரமோற்சவத்தின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் விஜயராகவப் பெருமாள், மல்லிகை, ரோஜா, மனோரஞ்சிதம், சம்பங்கி மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலை அலங்காரத்தில் தேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். பிறகு சாமிக்கு மேளதாளங்கள் முழங்க கற்பூர தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பக்தி கரகோஷங்களை எழுப்பினர்.

தேர் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்டு மீண்டும் நிலையை அடைந்தது. வழியெங்கும் பெருமாளுக்கு கற்பூர தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story