வடமாநிலத்தினர் மீது வதந்தி பரப்புபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் -துரை வைகோ


வடமாநிலத்தினர் மீது வதந்தி பரப்புபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் -துரை வைகோ
x
திருப்பத்தூர்

திருப்பத்தூர்

வடமாநிலத்தினர் மீது வதந்தி பரப்புபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என துரை வைகோ கூறினார்.

ஆவணப்படம்

திருப்பத்தூர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் திருப்பத்தூர் தியேட்டரில் திரையிடப்படும் நிகழ்ச்சியை ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்து ம.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் படத்தை பார்த்தார்.

பின்னர் நடைபெற்ற ம.தி.மு.க. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கண்ணதாசன் தலைமை வகித்தார். அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நசீர் கான் வரவேற்றார்.

கூட்டத்தில் துரை வைகோ பேசியதாவது:-

அங்கீகாரம் கிடைக்கவில்லை

தமிழ்நாட்டு மக்களுக்காக 56 ஆண்டுகள் போராடிய வைகோ பற்றி பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்படும் வகையில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 56 வருட உழைப்பிற்கு வைகோவிற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்றால் இல்லை. வைகோ பற்றி கேட்டால் தி.மு.க.வில் இருந்து வந்து தனிக்கட்சி தொடங்கியவர், ஈழத் தமிழருக்காக போராடியவர், ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடியவர் என்று மட்டும் தான் தெரியும். 56 ஆண்டு காலம் நாட்டிற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்ற ஒப்பற்ற தலைவர் வைகோ என பேசினார்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர் முடிவில் நகராட்சி கவுன்சிலர் டி.கே. சரவணன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் குண. இமயவர்மன் நன்றி கூறினார்.

பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய பாதுகாப்பு சட்டத்தில்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பான சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதியின்மை, வன்முறையை பரப்புவதற்கான முயற்சியாகும். வதந்திகளை பரப்பும் இந்த முயற்சியானது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்குவதற்கும், இந்தி பேசும் மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதற்குமான முயற்சியாகும். வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு பா.ஜ.க. தான் காரணம். ஆனால் தி.மு.க. கூட்டணி கட்சிகள் காரணம் என அண்ணாமலை பேசி வருகிறார்.

சாலைகள், கட்டுமானம், ஓட்டல்கள், போன்றவற்றில் வட மாநில தொழிலாளர்கள் தான் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் சென்று விட்டால் இங்கு பொருளாதாரம் நலிவடைந்து விடும். தமிழ்நாடு கல்வியில் உயர்ந்து, கணினி துறை உள்ளிட்ட ஒயிட் காலர் பணிக்கு சேர்ந்து விட்டார்கள். வதந்தி பரப்பிய டெல்லியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் உள்ளிட்ட அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அண்ணாமலை என்னை கைது செய்து பாருங்கள் என சவால் விடுகிறார். அவர் பதவி வகிக்கும் பா.ஜ.க. மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வரட்டும்.

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பின்புலம் இருக்கும் தைரியத்தில் அவர் இவ்வா்று பேசுகிறார். சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். இதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. கியாஸ் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து விரைவில் ம.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெறும் என கூறினார்.


Next Story