தொப்பூரில் பராமரிப்பின்றி சிதிலமடையும் போலீஸ் குடியிருப்பு பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
நல்லம்பள்ளி:
தொப்பூரில் பராமரிப்பின்றி சிதிலமடையும் போலீஸ் குடியிருப்பை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
போலீஸ் குடியிருப்பு
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் போலீஸ் நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தொப்பூர் கணவாய் பகுதி வழியாக தினமும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் போலீசார் பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர்ச்சியாக ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன போக்குவரத்தை கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொப்பூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு கடந்த 2001-ம் ஆண்டு தொப்பூர் மலைப்பாதை தொடங்கும் இடத்தின் அருகே குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த குடியிருப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு 27 வீடுகள் கட்டப்பட்டன. இங்கு போலீசார் குடும்பங்களுடன் வசித்து வந்தனர்.
வெறிச்சோடியது
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் போலீசாரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. பின்னர் இந்த குடியிருப்பு வளாகத்தில் போலீசாரின் குடும்பத்தினர் யாருமே வசிக்காத நிலை ஏற்பட்டது.
இங்கு வசித்த குடும்பங்கள் வெளியேறி விட்டதால் போலீஸ் குடியிருப்பு வளாகம் வெறிச்சோடியது. மேலும் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைய தொடங்கியது. இந்த குடியிருப்பு வளாகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வாடகைக்கு விடலாம்
நல்லம்பள்ளியை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரதாபன்:-
தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் கணவாய் பகுதி அதிக வாகன போக்குவரத்து கொண்டது. அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் பகுதியாகவும் உள்ளது. இந்த பகுதியில் பணிபுரியும் போலீசாரின் வசதிக்காக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் அண்மை காலமாக முறையான பயன்பாடு இன்றி காலியாக இருப்பது இந்த பகுதி வழியாக சென்று வரும் பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தில் போலீசார் தொடர்ந்து வசிப்பதில் நடைமுறை பிரச்சினைகள் இருந்தால் அதற்குரிய தீர்வை காண வேண்டும். இல்லாவிட்டால் இங்கு காலியாக உள்ள வீடுகளை இந்த பகுதிகளை சேர்ந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்
தர்மபுரியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம்:-
தொப்பூரில் உள்ள போலீசாருக்கான குடியிருப்பு வளாகத்தில் நான் ஓய்வு பெறும் வரை குடும்பத்தினருடன் வசித்து வந்தேன். அப்போது மேலும் பல குடும்பங்கள் இங்கு வசித்தனர். இப்போது போலீசார் குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நகர்ப்புற பகுதிகளில் வசிக்க விரும்புகிறார்கள். பலர் சொந்த வீடு கட்டி சென்று விடுகிறார்கள். இதனால் இங்கு வசித்து வந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து விட்டது. தற்போது போலீஸ் குடியிருப்பு பயன்பாடின்றி உள்ளது. இதனை எந்த வழியிலாவது பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.
சேதமடையும்
செக்காரப்பட்டியை சேர்ந்த பெரியசாமி:-
தொப்பூரில் போலீசாருக்கு கட்டப்பட்ட குடியிருப்பு வளாகம் இப்போது யாரும் வசிக்காததால் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இங்கு ஆவிகள் நடமாடுவதாக வதந்தி பரப்பப்படுகிறது. இப்போது பராமரிப்பு இன்றி காணப்படும் நிலை தொடர்ந்தால் இந்த குடியிருப்புகள் சேதமடைந்து சிதிலமடைய தொடங்கிவிடும். தொப்பூர் பகுதியில் பல ஏழை எளிய குடும்பங்கள் சிறிய வீடுகளில் இடப்பற்றாக்குறையால் சிரமப்படும் சூழலில் வாழ்கிறார்கள். இத்தகைய குடும்பங்களுக்கு இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளை குறைந்த வாடகை நிர்ணயித்து வசிக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.