திருவண்ணாமலை: மகாதீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1,150 மீட்டர் திரிக்கு சிறப்பு பூஜை..!
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலையில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இந்த நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது.
இந்நிலையில், தீபத் திருவிழாவை முன்னிட்டு மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1,150 மீட்டர் திரிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தீபத்திரிக்கு சந்தனம், உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
மகா தீபத்தை காண இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அனைத்து அடிப்படை பணிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் மூலம் செய்யப்பட்டு வருகிறது.