திருப்பூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கழிவுநீர் தேங்கியும், குப்பைகள் குவிந்தும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.


திருப்பூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கழிவுநீர் தேங்கியும், குப்பைகள் குவிந்தும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
x
திருப்பூர்

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கழிவுநீர் தேங்கியும், குப்பைகள் குவிந்தும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

சுகாதாரம் என்ன விலை?

சுத்தம் சோறு போடும் என்பார்கள். அனைத்து இடங்களையும் சுத்தமாக வைக்க வேண்டிய நிலையில் ஆஸ்பத்திரி வளாகம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். நோய் காக்கும் இடமாக உள்ள ஆஸ்பத்திரிகள் சுத்தம் இல்லாமல் போனால் அவை நோய் பரப்பும் இடமாக மாறி விடும். அந்த வகையில் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சுகாதாரம் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிலேயே அங்கு சுற்றுப்புற சுகாதாரம் காக்கப்படுகிறது.

தற்போது இங்குள்ள தாய்-சேய் சிகிச்சை பிரிவின் பின் பகுதியில் குப்பை தொட்டிகளை சுற்றிலும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதில் மருத்துவகழிவுகள் அதிகம் இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதேபோல் இதில் ரத்த வாடை கொண்ட கழிவுகளும் கிடப்பதால் இவற்றை நாய்கள் தூக்கி சென்று ஆங்காங்கே போட்டு செல்கின்றன. இதேபோல் இந்த கட்டிடத்தின் எதிரே உள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் முறையாக வெளியேறாமல் தேங்கி நிற்கிறது.

குப்பை குவியல்

இவ்வாறு நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகியுள்ளன. இதனால் அருகில் உள்ள சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உடல் நிலை மேலும் மோசமடையும் வாய்ப்பு உள்ளது.

இங்குள்ள தாய்-சேய் சிகிச்சை பிரிவின் கட்டிடம் 5 அடுக்கு மாடிகளுடன் பார்ப்பதற்கு கம்பீரமாகவும், அழகாகவும் காட்சியளிக்கிறது. ஆனால், உள்ளே சென்று பார்த்தால் நிலமை தலைகீழாக உள்ளது. காரணம், இந்த கட்டிடத்தின் மைய பகுதியில் உள்ள காலியிட வளாகம் முழுவதும் ஆஸ்பத்திரியில் பயன்படுத்தப்பட்ட பழைய கட்டில், மெத்தை, மருத்துவ பரிசோதனை கருவிகள், மருத்துவ உபகரணங்கள், நாற்காலிகள், குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட மின்சாதன ெபாருட்கள், பிளாஸ்டிக் கேன், பக்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பழைய சாமான்கள் குப்பை குவியலாக போடப்பட்டுள்ளன. இவற்றோடு குப்பைகளும் கிடக்கின்றன.

இதனால் இங்கு சுகாதாரமற்ற நிலை உள்ளது. இதனால் இங்கு சிகிச்சை பெற்று வரும் பச்சிளம்குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

தூய்மை காக்கப்படுமா?

இதுமட்டுமின்றி இந்த கட்டிடத்தின் பின் பகுதியில் இருக்கும் கழிவறை தொட்டியும் சரியான பராமரிப்பின்றி அடிக்கடி நிரம்பி வழிகிறது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த தாய்-சேய் சிகிச்சை பிரிவிற்கு வரும் பெண்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளே காலனி அணிந்து வரக்கூடாது என கடுமையாக எச்சரிக்கப்படுகின்றனர். மற்றவர்களிடம் சுகாதாரத்தை எதிர்பார்க்கும் ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆஸ்பத்திரி வளாகத்தை சுகாதாரமின்றி அலங்கோலமான நிலையில் வைத்துள்ளது. இதனால் ஊருக்கு தான் உபதேசமோ என பொதுமக்கள் ஆத்திரம் கொள்கின்றனர்.

எனவே, ஆஸ்பத்திரியின் உள்வளாகத்தில் குவிந்து கிடக்கும் பழைய சாமான்களை அப்புறப்படுத்தவும், தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி, கழிவுநீர் தேங்காமல் இருக்க செய்யவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். தற்காலிக நடவடிக்கையோடு நின்று விடாமல் எப்போதும் சுகாதாரத்தை பேணி காப்பதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் முன்வருமா?.


Next Story