திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி


திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி
x

திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி நடைபெற்றது.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா, குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட களிமங்கலம் கிராமத்தில் திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தேர்பவனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை முன்னிட்டு அன்று மாலை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப் அருள்ராஜன் மற்றும் அருட்தந்தை தேவராஜ் ஆகியோர் கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் திருச்சி மறை மாவட்ட பொருளாளர் ஜேம்ஸ் செல்வநாதன் மற்றும் அருட்தந்தை யூஜின் ஆகியோர் கலந்து கொண்ட ஆடம்பர திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இரவு 9.30 மணியளவில் மலர் தோரணங்கள், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருஇருதய ஆண்டவர் சொரூபம் பொருத்தப்பட்டு தேர் பவனி நடைபெற்றது. வாணவேடிக்கை, அதிர்வேட்டுகள், பெண்கள் குழுவின் தப்பாட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேரானது நேற்று அதிகாலை ஆலயத்தின் நிலையை அடைந்தது. தேர் பவனியின்போது கிறிஸ்தவ பொதுமக்கள் தங்களது வீடுகளின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து நேற்று மாலை ஆலயத்தில் திருவிழா நிறைவு கூட்டு திருப்பலி மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இரவு 8 மணியளவில் ஆலயம் முன்பு நாட்டுப்புற பல்சுவை கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் குன்னத்தூர், களிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை களிமங்கலம் கிராம கிறிஸ்தவ பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.


Next Story