தியாகராஜர் கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்


பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ந்தேதி ஆழித் தேரோட்டம் நடக்க இருப்பதால், திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருவாரூர்


பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ந்தேதி ஆழித் தேரோட்டம் நடக்க இருப்பதால், திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் நடக்கும் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. எண்கோண வடிவில் அமைந்த இந்த ஆழித்தேர், 4 நிலைகளையும், 7 அடுக்குகளையும் கொண்டது.தேரை இழுத்துச் செல்வது போல அமைந்த 4 குதிரைகள், 32 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டவை.

தேரை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்படும். இவை ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. கயிற்றின் சுற்றளவு 21 அங்குலம் ஆகும்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இதுதான். அலங்கரிக்கப்பட்ட இந்த தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடைபெற உள்ளது.

எண்திசை கொடியேற்ற திருவிழா

பங்குனி உத்திர பெருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள், சாமி வீதியுலா உள்ளிட்டவை நடந்து வருகிறது. அதன்படி கடந்த 9-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் திருவிழா நடந்தது. 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பக்தோற்சவம் எனும் அடியார் கூடும் திருவிழாவும், 19-ந் தேதி காலபைரவர் திருவிழாவும், 20-ந் தேதி காட்சி கொடுத்த நாயனார் திருவிழாவும் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு புற்றிடங்கொண்டார் உச்சி கால அளவில் பிரசன்னார்த்தம் ஆயிரம் கலச நன்னீராட்டு விழா நடக்கிறது. 26-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தியாகராஜ சாமி வசந்த பெருவிழா மற்றும் எண் திசை கொடியேற்ற திருவிழா நடக்கிறது.

ஆழித்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி

27-ந் தேதி இந்திர விமான வாகன திருவிழாவும், 28-ந் தேதி பூதவாகனத்தில் எழுந்தருளும் விழா, 29-ந் தேதி வெள்ளியானை வாகன விழா , 30-ந் தேதி வெள்ளி காளை வாகனத்தில் எழுந்தருளும் விழாவும் நடக்கிறது.

தேரோட்டத்திற்கு முந்தைய நாளன்று காலை வீரகண்டயம் ரிஷப லக்னத்தில் ஆழித்தேருக்கு செல்லுதல் நிகழ்ச்சியும், மாலை திருக்கயிலாய வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு தியாகராஜர் சாமி ஆழித்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

தகரத்தினாலான பந்தல்

இவ்வாறு தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், வெயிலில் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க கோவில் வளாகம் மற்றும் கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் தொடங்கி சன்னதி தெரு, நால்கால் மண்டபம், கல் தேர் வரை தகரத்தினால் ஆன பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராட்சத ராட்டினங்கள் வர தொடங்கி விட்டன.

வாகனங்கள் செல்ல தடை

தேரோட்டத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் சிறிய தேர் முதல் பெரிய தேர் வரை அனைத்து தேர்களின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தேரின் கட்டுமான பணிகள் பாதிக்காமல் இருப்பதற்காகவும், பாதுகாப்பாக நடப்பதற்காகவும் கீழவீதி வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பஸ்கள், வாகனங்கள் தெற்கு வீதி, மேல வீதி வழியாக வடக்கு வீதிக்கு சென்று வருகின்றன.


Next Story