கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீடு வழங்காததால் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது

விழுப்புரம்

விழுப்புரம்

கையகப்படுத்தப்பட்ட இடம்

விழுப்புரம் கே.கே.சாலை கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி ராதாம்மாள்(வயது 70). இவருக்கு சொந்தமாக விழுப்புரம் தந்தை பெரியார் நகர் பகுதியில் 2,400 சதுர அடி பரப்பளவில் இடம் இருந்தது. இந்த இடத்தை கடந்த 1992-ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டுவதற்காக கையகப்படுத்தியது.

இதற்காக ராதாம்மாளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக வீட்டுவசதி வாரியம் அறிவித்தது. ஆனால் உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வீட்டுவசதி வாரியம் நடவடிக்கை எடுக்காததால் கடந்த 2001-ல் விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ராதாம்மாள் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராதாம்மாளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையான ரூ.4 லட்சத்து 99 ஆயிரத்து 260-ஐ விரைந்து வழங்கும்படி வீட்டுவசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது. இருப்பினும் இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்காததால் மனுதாரர் ராதாம்மாள் சார்பில் வக்கீல் தனராஜன், கடந்த 2013-ல் நிறைவேற்று மனுதாக்கல் செய்தார்.

ஜப்தி செய்ய வந்தனர்

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ராதாம்மாளுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.10½ லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வீட்டுவசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது. அதன் பிறகும் இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துக்களை ஜப்தி செய்யுமாறு கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் வீட்டுவசதி வாரியம், ராதாம்மாளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துக்களான 5 கணினிகள், 10 இரும்பு அலமாரிகள், 10 மின்விசிறிகள், 10 டேபிள்கள், மாவட்ட கலெக்டரின் வாகனம் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்வதற்காக நேற்று வக்கீல்கள் தனராஜன், ராஜகுமார், மனுதாரர் ராதாம்மாள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஜப்தி நோட்டீசுடன் வந்தனர்.

அப்போது அங்கு கலெக்டர் இல்லாததால், அவர்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ஹரிதாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 2 மாதம், கால அவகாசம் வழங்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். அதன்பேரில் கோர்ட்டு ஊழியர்கள், ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைத்து அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.

கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story