நம்பியூர் அருகே உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு
நம்பியூர் அருகே உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு
நம்பியூர்
நம்பியூர் அருகே உள்ள பழைய அய்யம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு ஆறுமுகம் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்து உள்ளார். அப்போது கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததுடன், அதில் இருந்த காணிக்கையும் திருட்டு போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நம்பியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்றது ெதரியவந்தது. மேலும் உண்டியல் கடந்த 1 ஆண்டாக திறக்கப்படாததால் அதில் ரூ.10 ஆயிரம் வரை காணிக்கை இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.