விநாயகர் கோவிலில் உண்டியலை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள்
திருப்பூரில் விநாயகர் கோவிலில் உண்டியலை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருப்பூரில் விநாயகர் கோவிலில் உண்டியலை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விநாயகர் கோவில்
திருப்பூர் கருவம்பாளையம் நடத்தலாங்காடு பகுதியில் ஸ்ரீசெல்வ கணபதி கோவில் உள்ளது. இதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இந்த கோவிலின் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் (வயது 47) என்பவர் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கோவிலில் அனைத்து பூஜைகளும் முடிந்த பின்னர் இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
உண்டியல் திருட்டு
இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அப்ேபாது அங்கு கோவில் கருவறை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுபற்றி கோவில் அறங்காவலருக்கு தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கோவில் அறங்காவலர் குழுவை சேர்ந்த பழனிச்சாமி திருப்பூர் மத்திய போலீசாரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று ் விசாரணை மேற்கொண்டனர்.
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
கோவில் உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் காணிக்கை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததால் மர்ம ஆசாமிகள் கோவிலின் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அதன் பின்னர் கோவிலின் பக்கவாட்டு கதவு வழியாக வெளியே தப்பிச்சென்றிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். கோவிலில் உண்டியல் திருட்டு சம்பவம் அந்த பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.