வாய்க்கால் வெட்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் மீண்டும் தொடங்கியது
வளையமாதேவி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் மீண்டும் தொடங்கி உள்ளது.
சேத்தியாத்தோப்பு,
நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் 2 சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி புதிய பரவனாற்றுக்கு வாய்க்கால் வெட்டும் பணி, கரிவெட்டி கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களில் சாகுபடி செய்த பயிர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டன.
இதற்கு பா.ம.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சில அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து மர்ம நபர்கள் கல்வீசியதில் 20 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
தற்காலிகமாக நிறுத்தம்
இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணியை கைவிடக்கோரி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச் கேட் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்க வாய்க்கால் வெட்டும் பணி மற்றும் சாலை அமைக்கும் பணி ஆகியவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால் போராட்டத்தில் பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிலம் கையப்படுத்தும் பணி மீண்டும் நடைபெற்றால் மாவட்டம் தழுவிய போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் முடிவு செய்தனர்.
ஆயிரம் போலீசார் வருகை
இதற்காக சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். மேலும் திருச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீசாரும் நெய்வேலிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் நேற்று 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் ஆயிரம் போலீசார் நெய்வேலிக்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் 2-வது சுரங்க விரிவாக்க பணிகள் நடைபெறும் இடங்களிலும், அதை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சந்திப்புகளிலும் பாதுகாப்பு பணிக்காக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீண்டும் பணி தொடங்கியது
இதன் பின்னர் நேற்று காலை சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வாய்க்கால் வெட்டும் பணி மற்றும் வளையமாதேவி-கரிவெட்டி இடையே சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது. இங்கு சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காலை 8 மணியளவில் தொடங்கிய பணி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இதில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என போலீசார் தெரிவித்தனர்.