ஊராட்சி தலைவரின் காலில் விழுந்து மனு கொடுத்த பெண்கள்
சேலம் அருகே சுகாதார வளாகம் கட்டித்தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவரின் காலில் பெண்கள் விழுந்து மனு கொடுத்ததால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
கிராம சபை கூட்டம்
சேலம் ஊராட்சி ஒன்றியம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, ஊராட்சியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து 3-வது வார்டு உறுப்பினர் சுலோச்சனா பேசும்போது, எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காமல் புறக்கணிப்பது ஏன்? என்று கூறி ஊராட்சி மன்ற தலைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
காலில் விழுந்து மனு
அப்போது, 3-வது வார்டு சத்யா நகரை சேர்ந்த பெண்கள் சிலர், சுகாதார வளாகம் இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், எனவே பொது சுகாதார வளாகம் கட்டித்தரக்கோரியும் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதனின் காலில் விழுந்து மனு கொடுத்தனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டரிடம் எடுத்துக்கூறி உரிய வசதிகள் செய்து தருவதாக ஊராட்சி தலைவர் உறுதியளித்தார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சத்யா நகரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். ஆனால் கழிவறை வசதி இல்லை. ஏற்கனவே நடந்த கிராம சபை கூட்டங்களில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கழிவறை வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் சரியான முறையில் மக்களுக்கு சென்றவடைது இல்லை. எனவே, மக்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும், என்றனர்.