குழந்தையை விற்க முயன்ற அரசு பெண் டாக்டர் பணியிடை நீக்கம்
குழந்தையை விற்க முயன்ற அரசு பெண் டாக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ்- நாகஜோதி தம்பதிக்கு கடந்த 12-ந் தேதி 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டராக அனுராதா என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த லோகாம்பாள் (38) என்பவர் மூலம் ரூ.2 லட்சம் தருவதாக தினேசிடம் பேரம் பேசி பச்சிளம் குழந்தையை விற்க கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
பணியிடை நீக்கம்
இதுகுறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் தினேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவரம்பன் வழக்குப்பதிவு செய்து டாக்டர் அனுராதா, குழந்தைகள் புரோக்கர் லோகாம்பாள் ஆகியோரை கைது செய்தார். மேலும் 2 பேரையும் போலீசார் திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரத்தில் நிறைய புரோக்கர்களுக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் புரோக்கர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் குழந்தை விற்றல் சம்பவத்தில் தொடர்புடைய அரசு டாக்டர் அனுராதாவை பணியிடை நீக்கம் செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.