சாலையின் நடுவே பள்ளத்தில் சிக்கிய லாரியின் சக்கரங்கள்
சாலையின் நடுவே பள்ளத்தில் சிக்கிய லாரியின் சக்கரங்கள் சிக்கியது
திருச்சி மாநகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, 47-வது வார்டு கொட்டப்பட்டு இந்திராநகர் பகுதியில் சாலையின் நடுவில் குழிதோண்டி பாதாள சாக்கடைக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு மண் கொண்டு மூடப்பட்டது. ஆனால் அதை ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்தினர் குழியை மூடிய பின்னர், சிமெண்டு கலவை கொண்டு செப்பனிடவில்லை. கடந்த இரு நாட்களாக அப்பகுதியில் மழை பெய்ததால் சாலையின் நடுவில் லேசான பள்ளம் ஏற்பட்டு இருந்தது. நேற்று மாலை அந்த ரோட்டில் மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியின் முன் பக்க மற்றும் பின்பக்க சக்கரங்கள் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்த மண்ணை சாலையில் கொட்டிவிட்டு, டிப்பர் லாரியை நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்டனர். இதனால் அந்த பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, 47-வது வார்டுக்கு உட்பட்ட இந்திராநகர் பிரதான சாலை, வெங்கடேஸ்வராநகர், ஐஸ்வர்யா எஸ்டேட் விரிவாக்க பகுதிகளில் சாலையின் நடுவே பல இடங்களில் முறையாக குழிகளை மூடாததால் பள்ளமாகவே உள்ளது. இதனால் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் அந்த பகுதிக்கு வர மறுக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே, பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து சாலையை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் சாலையின் நடுவில் தோண்டப்பட்ட குழி உள்ள இடங்களில் சிமெண்டு கலவை கொண்டு தற்காலிகமாக செப்பனிடவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.