சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்தது
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ளது. எனவே வருவாய் துறையினர் வெள்ள அபாய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தண்டராம்பட்டு
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ளது. எனவே வருவாய் துறையினர் வெள்ள அபாய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நீர்வரத்து அதிகரிப்பு
தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும்
இதில் 7321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இடது மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் குறிப்பாக தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியிலும் கல்வராயன் மலைத்தொடரிலும் தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று 79 மில்லி மீட்டர் மழை சாத்தனூர் அணை பகுதியில் பெய்தது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1750 மில்லியன் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
116 அடி உயர்ந்தது
நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் தற்போது அணை நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது 6614 மில்லியன் கன அடி நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இது மொத்த கொள்ளளவில் 91 சதவீதம் ஆகும்.
சாத்தனூர் அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியவுடன் அணையில் இருந்து உபரி நீரை தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம்.
இன்னும் ஒரு அடி மட்டுமே உயர வேண்டி இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணி துறை அதிகாரிகள் நீர்வரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
வெள்ள அபாய தடுப்பு நடவடிக்கை
சாத்தனூர் அணையின் உபரி நீர் எந்த நேரமும் திறக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தண்டாம்பட்டு தாசில்தார் அப்துல் ரகுப் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள் வெள்ள அபாய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராமங்கள் தோறும் இதுகுறித்து ஒலி பெருக்கிகள் மூலம் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.