கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அடையாளம் தெரிந்தது
கயத்தாறு அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அடையாளம் தெரிந்தது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் அடையாளம் தெரிந்தது.
வாலிபர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கர சாலையில் பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி காலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
வாலிபரின் உடல் கிடந்த இடத்தில் மதுபாட்டில்கள், பீடிகள், பொரித்த சிக்கன், கடலைமிட்டாய் போன்றவையும் கிடந்தன.
தகவல் அறிந்ததும் கொலையான வாலிபரின் உடலை கயத்தாறு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையுண்ட வாலிபர் யார்? அவரை எதற்காக கொலை செய்தனர்? கொலையாளிகள் யார்? என பல்வேறு கோணங்களில் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அடையாளம் தெரிந்தது
விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மானகசேரி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த அரிச்சந்திரன் என்பவருடைய மகன் மகேஸ்வரன் (வயது 25) என்பதும், மீன் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இந்தநிலையில் இவருக்கும், மற்றொரு மீன் லாரி டிரைவருக்கும் வேறு மாநிலங்களில் இருந்தபோது தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறின் காரணமாக குடிபோதையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.