நடுரோட்டில் கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது


நடுரோட்டில் கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது
x

திருச்செங்கோட்டில் கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் மொபட் சேதமானது.

நாமக்கல்

திருச்செங்கோடு

டீசல் டேங்கர் வெடித்தது

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி கிரானைட் கற்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் சரவணன் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் லாரி உரிமையாளர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ராமச்சந்திர நாயுடு (57) என்பவரும் வந்தார்.

இந்தநிலையில் திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே லாரி வந்த போது பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது திடீரென டீசல் டேங்கரில் தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் சரவணன், ராமச்சந்திர நாயுடு ஆகியோர் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். அதற்குள் மளமளவென தீப்பிடித்து லாரி நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

மொபட் சேதம்

இதனிடையே லாரியின் பின்னால் வந்த மொபட்டும் தீப்பிடித்தது. மொபட்டில் வந்த திருச்செங்கோட்டை அடுத்த பால்மடையை சேர்ந்த நரசிம்மா (55), அவரது மனைவி சரஸ்வதி ஆகிய இருவரும் மொபட்டை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர். இதில் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் மொபட் எரிந்து சேதமானது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையம் மற்றும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். திருச்செங்கோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை மாற்று பாதையில் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

திருச்செங்கோட்டில் கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி திடீரென நடுரோட்டில் தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story