திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீர்
திற்பரப்பு அருவியில் மிதமாக கொட்டும் தண்ணீர்
திருவட்டார்:
திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. விடுமுறை நாளியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திற்பரப்பு அருவி
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திற்பரப்பு அருவி விளங்கி வருகிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் வார விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
தற்போது குமரி மாவட்டத்தில் மழையில்லாததால் கோதையாற்றில் குறைந்த அளவு தண்ணீர் பாய்கிறது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது.
உற்சாக குளியல்
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திற்பரப்புக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே வருகை தந்தனர். அவர்கள் மிதமான தண்ணீர் கொட்டி வரும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அருவியின் அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் ஆசைதீர குளித்தனர். மதியத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. மேலும் அவர்கள் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதையாற்றின் அழகை கண்டு ரசித்தனர்.
மாத்தூர் தொட்டிப்பாலம்
இதேபோல், மாத்தூரில் அமைந்துள்ள தொட்டிப்பாலத்தை காணவும் காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் தொட்டிப்பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர்.
பின்னர், கீழ் பகுதிக்கு வந்து தொட்டிப்பாலத்தின் பிரம்மாண்ட தூண்களை பார்த்து வியந்தனர். இதேபோல், பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை காணமுடிந்தது.