கோவில், மார்க்கெட்டில் வெள்ளம் சூழ்ந்தது
ஊட்டியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோவில், நகராட்சி மார்க்கெட்டில் வெள்ளம் சூழ்ந்தது.
ஊட்டி
ஊட்டியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோவில், நகராட்சி மார்க்கெட்டில் வெள்ளம் சூழ்ந்தது.
கனமழை கொட்டியது
வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஒரு வாரத்திற்கு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த 31-ந் தேதி கனமழை பெய்தது. நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.
இந்தநிலையில் நேற்று ஊட்டி நகரில் காலை முதல் வெயில் அடித்தது. பின்னர் மதியம் வானம் மேகமூட்டத்துடன், மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. மதியம் 12 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஊட்டியில் தாழ்வான இடங்கள், சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
வெள்ளம் புகுந்தது
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்த கடைகளுக்கு முன்பு தண்ணீர் தேங்கியது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். கனமழையின் போது, ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.
கனமழையால் ஊட்டி படகு இல்லத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் மிதி படகு, துடுப்பு படகுகள் கரையோரத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மழை நின்ற பின்னர் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். மேலும் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்த படி நடந்து சென்றனர்.
பயிர்கள் நீரில் மூழ்கின
இதேபோல் ஊட்டி சுற்றுப்புற பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் எம்.பாலாடா பஜார் பகுதியை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. மேலும் கோவில் மற்றும் சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அப்பகுதியில் உள்ள கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கால்வாயை ஒட்டி உள்ள விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு பயிரிடப்பட்டு இருந்த கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.
பந்தலூர், கோத்தகிரி பகுதிகளிலும் கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-13, குந்தா-17, கிண்ணக்கொரை-23, கேத்தி-28, குன்னூர்-10, கீழ் கோத்தகிரி-44, பந்தலூர்-10 பதிவாகி உள்ளது.