நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும்-கே.எஸ்.அழகிரி உறுதி


நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும்-கே.எஸ்.அழகிரி உறுதி
x

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெல்லும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்தார்.

விருதுநகர்


நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெல்லும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்தார்.

பொதுக்கூட்டம்

விருதுநகர் தேச பந்து திடலில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

அகில இந்திய அளவில் காங்கிரஸ் இல்லாமல் பா.ஜ. கட்சியை அகற்ற முடியாது.எனவே தான் ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. சிறுசிறு மாநில கட்சிகளும் கூட இந்த கூட்டணியில் இடம் பெற முன்வந்துள்ளது. இதைத்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டணியை பார்த்து தான் பிரதமர் மோடி, அமித் ஷாவும் அஞ்சுகின்றனர். காங்கிரஸ் கட்சி தான் இந்த நாட்டில் மாற்றங்களை கொண்டு வந்தது.

40 தொகுதிகள்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும். பெருந்தலைவர் காமராஜர் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சி தந்தவர்.

காமராஜரின் பெயர் காங்கிரஸ் கட்சிக்கு, தொண்டர்களுக்கு எழுச்சி தரும். எனவே இளைஞர்கள் காங்கிரஸ் பேரியக்கம் மேம்பட உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

காமராஜர் விருது

முன்னதாக 10-ம் வகுப்பு, பிளஸ்-1 தேர்வில் முதலிடம் பெற்ற 500 மாணவ-மாணவிகளுக்கும், சுகாதாரம், மருத்துவம், தூய்மை ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கும் மாணிக்கம் தாகூர் எம்.பி., காமராஜர் விருது வழங்கி பாராட்டினார்.

கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், மாவட்ட தலைவர்கள் ஸ்ரீராஜாசொக்கர், ரங்கசாமி, காங்கிரஸ் நிர்வாகிகள் பாலகிருஷ்ண சாமி, சிவகுருநாதன், வக்கீல் சீனிவாசன், மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story