புரட்டாசி மாதத்தால் மீன்கள் விற்பனை மந்தம்
புரட்டாசி மாதத்தால் மீன்கள் விற்பனை மந்தமாக நடந்தது. இதனால் கடைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தது.
மீன்கள் விற்பனை
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு, காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் சாலையோரம் மீன்கடைகள் அமைத்து விற்பனை மும்முரமாக நடைபெறும். இந்த பகுதியில் முன்பு அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதும். அதேபோல் கரூர் மீன் மார்க்கெட்டில் மக்கள் அதிகாலையில் இருந்தே குவிந்து மீன்களை போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். இங்கு கடல் மீன்கள், டேம் மீன்களும், ராமேசுவரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கேரள பகுதிகளில் இருந்து மீன்களும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெறிச்சோடியது
தற்போது புரட்டாசி மாதம் என்பதால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன்கள் வாங்க ஆட்கள் இல்லாமல் மீன்மார்க்கெட் மற்றும் சாலையோர மீன்கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் மீன்கள் விற்பனை மாலை வரை சுமாராகவே நடந்தது. இதனால் வியாபாரிகள் வாங்கிய மீன்களை என்ன செய்வது என்று தெரியாமல் வாங்கிய விலையை விட சற்று விலையை குறைத்தே விற்பனை செய்தனர். இதனால் நேற்று விற்பனை மிகவும் மந்தமாக நடந்தது.
ஆர்வம் காட்டுவதில்லை
இதுகுறித்து கரூர் மீன் மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த மாதம் உஜிஜனா என்ற கடல் மீன் கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.600-க்கு விற்கிறது. ஜலா என்ற கடல் மீன் ரூ.400-க்கு விற்றது, தற்போது ரூ.250-க்கும், ஊழி ரூ.600-க்கு விற்றது தற்போது ரூ.400-க்கும், நெத்திலி ரூ.400-க்கு விற்றது தற்போது ரூ.300-க்கும் விற்கப்படுகிறது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பொதுமக்கள் மீன்களை சாப்பிட அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் சராசரியாக கடந்த மாதத்தை காட்டிலும் 20 சதவீதம் அளவிற்கு மீன் விற்பனை குறைந்துள்ளது என்றார்.
நொய்யல்
நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாட்டுக்கோழிகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனை வியபாரிகள் தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வாங்கி செல்வர். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பொதுமக்கள் நாட்டுக்கோழிகளை விரும்பி சாப்பிடுவதில்லை. இதனால் அதன் விலை சரிவடைந்துள்ளது. கடந்த வாரம் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.350-க்கு விற்றது, நேற்று ரூ.300-க்கு விற்பனையானது.