அமைச்சர் கீதாஜீவனிடம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு
தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனிடம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் தினக்கூலி, மதிப்பூதியம், தொகுப்பூதியங்களில் கணினி உதவியாளர், சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் பலர் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு எந்தவித பணிப் பாதுகாப்பும் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு எந்தவிதமான பணபலனும் கிடைப்பதில்லை. எனவே, பணியின்போது உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பத்திற்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கிட பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்த பணியாளர்களுக்கு குழுகாப்பீடு திட்டத்தில் சேர்த்து பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், தூய்மை பாரத இயக்க, வட்டார ஒருங்கிணைப்பாளராக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வந்த ராதாகிருஷ்ணன் என்பவர் அன்மையில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களிடமிருந்து பங்களிப்பாக ரூ.3 லட்சத்தையும், தமது பங்களிப்பாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 10ஆயிரத்தை உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் மனைவியிடம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேந்திரபிரபு, மாவட்ட செயலர் அன்றோ, மாவட்ட பொருளாளர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.