காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
காஞ்சீபுரத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கோரி , காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
திருமணம்
காஞ்சீபுரம் மானாமதி கண்டிகை பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் ஹரிஷ் (வயது 25). இவர் கடந்த சில ஆண்டுகளாக ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அதே தொழிற்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த பாலையூர் பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்பவரும் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு அவரது உறவினர் ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் வீட்டை விட்டு வெளியேறிய ஆர்த்தி கடந்த 1-ந்தேதி அச்சரப்பாக்கதில் கிறிஸ்தவ முறைப்படி ஹரிஷை திருமணம் செய்து கொண்டு, மானாம்பதி கண்டிகையில் உள்ள கணவர் வீட்டில் தங்கியிருந்தார்.
தஞ்சம்
இதனை அறிந்த ஆர்த்தி குடும்பத்தினர் ஹரிஷ் வீட்டுக்கு உருட்டு கட்டைகளுடன் வந்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி பாதுகாப்புக் கோரி புகார் மனு அளித்தனர்.
ஆர்த்தி அளித்துள்ள அந்த புகார் மனுவில், எனது குடும்பத்தார் பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி என்னையும், என்னுடைய கணவரின் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே, எனக்கும், என்னுடைய கணவரின் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்குங்கள்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உரிய பாதுகாப்பு வழங்குவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உறுதியளிக்கப்பட்டது.